சென்னை: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர், நூர் முகமது (46). இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து முதல் மனைவி, கணவர் நூர் முகமது மீது, நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து, நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நூர் முகமது மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால், நூர் முகமது விசாரணைக்குச் செல்லாமல், தலைமறைவாகி உள்ளார். அதோடு அவர் வெளிநாட்டுக்கும் தப்பி ஓடிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நூர் முகமதுவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குவைத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று (அக்.9) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால், எல்ஓசி போடப்பட்டு தேடிக் கொண்டிருந்த 4 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி நூர் முகமதுவும் வந்துள்ளார்.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் நூர் முகமதுவின் பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தபோது, அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து நூர் முகமதுவை, வெளியில் விடாமல் பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
மேலும் குடியுரிமை அதிகாரிகள், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 4 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியான நூர் முகமது, குவைத்தில் இருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, நூர் முகமதுவை அழைத்துச் செல்ல உள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் நிலையத்தில் மரணம்.. கோவையில் நடந்தது என்ன?