சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் அபிராமி ராமநாதன் சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அபிராமி ராமநாதன், "சென்னையில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மூன்றாயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு முதலமைச்சரின் அனுமதி வாங்கவும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அனுமதி அளித்ததற்கும் நன்றி கூறவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளும் வழங்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திரையரங்குகள் செயல்படுவதற்கான வழிகாட்டு முறைகள் தற்போது வரை வெளியிடாமல் உள்ள நிலையில் அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பாக விதிகப்பட்டுள்ள 8 விழுக்காடு கேளிக்கை வரியை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தபோது தற்போது அரசு நெருக்கடியில் உள்ள நிலையில் அந்த வரியை நீக்க முடியாது என்றும் வரக்கூடிய காலங்களில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
பெரும்பான்மையான நாள்களில் 30 விழுக்காடு மட்டுமே பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகள் இயங்கிவந்த நிலையில் தற்போது அரசு கூறியிருக்கும் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்குவதால் எந்தப் பாதிப்பும் இல்லை" என்று கூறினார்.
தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிட மாட்டோம் என்று பாரதிராஜா கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இது குறித்து பாரதிராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு எட்டப்படும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.