தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடாதிருக்க 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
அதில், வாக்குச்சாவடி அலுவலர்கள் நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 27 பேருக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற மூன்று கட்டப் பயிற்சி வகுப்பின்போது, அஞ்சல் வாக்கினைச் செலுத்துவதற்கான படிவம் 12 வழங்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் பெறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தேர்தல் உதவி நடத்தும் அலுவலர்களால் அஞ்சல் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் வாக்குகள் முழுமையாகச் சென்று சேராத நிலையில் உள்ளது. இதனால், ஆசிரியர்களில் சிலர் தங்களின் ஜனநாயகக் கடமையைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தார். அதில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் பதிவுசெய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளது.
எனவே தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்.
அஞ்சல் வாக்குகள் பதிவுசெய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு கடைசிகட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது எனவும், அந்த வாக்குச் சீட்டில் அலுவலர்களின் அத்தாட்சியைப் பெற வேண்டியுள்ளதாகவும், அத்தாட்சிப் பெற்றாலும், பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய காரணத்தினால் அஞ்சல் வாக்குகளைப் பதிவுசெய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை எனவும் கூறியிருந்தார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 100 விழுக்காடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வந்து சேரவில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் மாயவன் கூறும்போது, “2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நான்கு லட்சத்து 35 ஆயிரத்து மூன்று ஊழியர்களில், மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்தனர். இதில், 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
மேலும், 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அலுவலர்களின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இதனால் 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகிவிட்டன. 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், 100 விழுக்காடு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் நான்கு லட்சத்து 79 ஆயிரத்துு 892 பேர் நியமனம்செய்யப்பட்டனர்.
அவர்களில் 25 விழுக்காட்டினருக்கான அஞ்சல் வாக்குகள் இன்னும் வந்து சேரவில்லை எனத் தெரிகிறது.
தேர்தல் பயிற்சி வகுப்பின்போதே படிவம் 12 (பி) பூர்த்திசெய்து அளித்தனர். சரியான முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்தும், அஞ்சல் வாக்குகளை அனுப்பாமல், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள அஞ்சல் வாக்குகளை உடனடியாக ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதனைப் பூர்த்திசெய்து 1ஆம் தேதிக்குள் அனுப்ப முடியும். எனவே தழ்நாடு தேர்தல் அலுவலர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமனம்செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 27 பேருக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 50 காவலர்கள் ஈடுப்பட்டனர். அவர்களில் வெளி மாவட்டங்களில் ஈடுப்பட்டவர்களுக்குத் அஞ்சல் வாக்குகள் அளிக்கப்பட்டன. சென்னையில் ஐந்தாயிரத்து 800 காவலர்களுக்கு அஞ்சல் வாக்குகள் அளிக்கப்பட்டன.
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களில் அஞ்சல் வாக்குகளைப் பெற்றவர்களில் 27ஆம் தேதி வரையில் நான்கு லட்சத்து 99 ஆயிரத்து 964 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கிறது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல்: கரோனா நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு