தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அப்துல்கலாம் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக்கொண்டார்.
இஸ்ரோ தலைவர் சிவன், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை திட்டமிடுதல், வடிவமைத்தல், ஆய்வு செய்தல் போன்றவற்றில் பங்காற்றியுள்ளார். ஏப்ரல் 2011ல் ஜி.எஸ்.எல்.வி. திட்டத்தில் பங்கேற்ற இவர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கிரையோஜெனிக் இன்ஜினை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பியதில் இவரது பங்கு அளப்பரியது.
ஜனவரி 2018இல் இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் தலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அப்துல்கலாம் விருதை அறிவித்தது. அந்த விருது ஐந்து லட்சத்துக்கான காசோலை, எட்டு கிராம் தங்கப் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சுதந்திர தினத்தன்று விருதை பெற முடியாத காரணத்தினால், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அப்துல்கலாம் விருதை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் கலந்துகொண்டார்.