சென்னை அண்ணா நகர் கே பிளாக் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவரை, இன்னோவா காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில், எஃப் ப்ளாக்கில் வசித்து வரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகத் தெரிவித்தனர். கடத்தல் நடந்த இடத்திலிருந்து தொடங்கி 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, கடத்திச் சென்ற இன்னோவா கார் எங்கு சென்றது என காவல் துறையினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
பொறியாளர் ரவிச்சந்திரனின் செல்போன் சிக்னல் மூலம் தொடர்ந்து காவல் துறையினர் கடத்தல்காரர்களை தேடி வந்த நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு திருமங்கலத்தில் மீட்கப்பட்டார். இதனையடுத்து ரவிச்சந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. துணை ஒப்பந்ததாரர்களாக இருக்கும் ஜோதிக்குமார், ஜெயக்குமார் ஆகியோரிடம் ரவிச்சந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு 35 லட்ச ரூபாய் வட்டிக்காக வாங்கியுள்ளார். இந்நிலையில், அதற்கு வட்டியும் அசலுமாக 90 லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
ரவிச்சந்திரன் பணத்தை கொடுக்க மறுத்ததால், ஜோதிக்குமார், ஜெயக்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் நபர்கள் தினேஷ், புருஷோத்தமன், சுரேஷ், பிரகாஷ் ஆகியோரை வைத்து ரவிச்சந்திரனை கடத்தியது தெரிய வந்தது. கடத்தப்பட்டவரிடம் 10 லட்ச ரூபாய்க்கு மட்டும் காசோலையில் கையெழுத்து வாங்கிவிட்டு திருமங்கலத்தில் இறக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடத்தலுக்கு உதவிய நான்கு பேரையும் காசோலையை, அண்ணா நகர் இந்தியன் வங்கியில் மாற்றிக்கொண்டு வெளியில் வரும்போது காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு முக்கிய காரணமான ஜோதிக்குமார், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசியலில் வெல்ல அதிர்ஷ்டமும் வேண்டும் - டி. ராஜேந்தர்