இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனத்தின் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளிலும், அம்பத்தூர் பால் பொருள்கள் தொழிற்சாலையிலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த சுமார் 450 தொழிலாளர்களை நிர்வாக இயக்குநர் வள்ளலார் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது கரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிரான செயலாகும். தினக்கூலி தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து, தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் செயல். நிர்வாக இயக்குநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனெனில் இதுவரை ஆவின் பால் பண்ணைகளிலும், பால் பொருள்கள் தொழிற்சாலையிலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு ஆவின் தரப்பில் இருந்து நாளொன்றுக்கு 340 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து விட்டு, ஒப்பந்த தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு 490 ரூபாய் வீதம் சம்பளமாக வழங்கிட முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
அதுமட்டுமின்றி அந்த ஒப்பந்ததாரர் தொழிலாளி ஒருவருக்கு தினசரி 300 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கிவிட்டு, நாளொன்றுக்கு ஒவ்வொரு பால் பண்ணைகளுக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பி முழுமையான தொழிலாளர்களை அனுப்பியதாக கணக்கு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆவினுக்கு இழப்பு ஏற்படும்.
ஆவின் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் ஆண்டுக்கு சுமார் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தோடு நிர்வாக இயக்குநர் வள்ளலார் செயல்பட்டு தினக்கூலி தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது தெரிகிறது.
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு வரை ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த காமராஜ் ஐஏஎஸ் சென்னையில் 65 மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்த ஆவின் பால் விநியோகத்தை ஒரே நாள் இரவில் 11 ஏஜென்டுகளிடம் கை மாற்றி ஒப்படைத்து பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தார். இதனால் ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. காமராஜ் விட்டுச் சென்ற ஊழல் பணிகளை செய்திடும் வகையில் வள்ளலாரும் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பேற்று பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு நன்மை செய்திடவும், ஆவினை வளர்ச்சிப் பாதையிலும் கொண்டுச் செல்ல வேண்டிய நிர்வாக இயக்குநர்கள் தங்க முட்டை போடுகின்ற வாத்தாக ஆவினை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. இவ்வளவு பெரிய தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது பால்வளத்துறையின் அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும், பால்வளத்துறை செயலருக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே, முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் பணி நீக்கம் செய்த தினக்கூலி பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திடவும், அதே நேரம் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளிலும், அம்பத்தூர் பால் பொருள்கள் தொழிற்சாலையிலும் பணி செய்ய ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய ஆணையை ரத்து செய்திடவும் உத்தரவிட வேண்டும். மேலும், வள்ளலாரை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர் செய்துள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:ஆவின் மோசடிகளை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை வேண்டும் - பால் முகவர்கள் சங்கம்