சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு மக்களைக் கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அதற்கு 35 ஆயிரம் ரூபாய் பத்து மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றனர்.
இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் வரை பெற்று ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்து, அதன் நிர்வாகிகள் தலைமறைவு ஆகினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தொடர்ந்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இது தொடர்பாக சோதனைகளை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இதனையடுத்து மோசடி தொடர்பாக சுமார் 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் 21 பேரை கைது செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 200 கோடி மதிப்புடைய சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். அதேபோல், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டு, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் அதன் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி துபாயில் தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும், இந்த மோசடி விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷை விசாரணைக்கு ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளனர்.
தலைமறைவு: இவ்வழக்கில் ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அவரது மனைவி, நடிகர் ஆர் கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாக இருந்து வந்தனர். எனவே, அவர்களைப் பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரை இன்டர்போல் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துபாயில் வைத்து சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த நிலையில் சுரேஷ், விசாரணைக்கு ஆஜராகாமல் தனது மகள் உடல்நிலை சரியில்லாததால் துபாயில் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆர்.கே சுரேஷைப் பிடிப்பதற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இதனையடுத்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி நாடு திரும்ப உள்ளதாகவும், ஆனால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதால் தான் கைது செய்யப்படுவேன் என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் டிசம்பர் 12ஆம் தேதி சில பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நீதிமன்றம் அவரை கைது செய்ய வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் இன்று (டிச.10) காலை 8.20 மணி அளவில் துபாயில் இருந்து விமானம் மூலம் நடிகர் ஆர்.கே சுரேஷ் சென்னை திரும்பி உள்ளார். அப்போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது, தான் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் சென்னை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்திய பின்பு, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நாளை மறுதினம் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜராகி ஆர்.கே.சுரேஷ் விளக்கம் அளிக்க இருப்பதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்ய ஜோதிடர் நியமனமா? சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் என்ன?