தமிழ்நாடு முதலமைச்சரை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்க ஜெயலலிதா செலுத்த தவறிய வரி பணம் ரூ.36 கோடி 90 லட்சம், தமிழ்நாடு அரசு (மக்கள் பணம்) செலுத்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நான்தான்! நான் யாருடைய பினாமியும் இல்லை.
தேர்தல் தோல்வி பயத்தில் வாய்க்கு வந்தபடி உளறிவருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நான் தொடர்ந்த வழக்கு 36 கோடியே 90 லட்ச ரூபாய் ஜெயலலிதா சொத்து வரி, வருமான வரி செலுத்த தவறிய பணம் ஜெயலலிதாவிற்காக தமிழ்நாடு அரசு மக்கள் பணத்தை எடுத்து கட்டியது தவறு என்பதாகும்.
ஆகையால்தான் மக்களுக்காக மக்கள் பணத்தை விரையப்படுத்தக் கூடாது வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தேன். இந்த வழக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டுதலால் அல்லது வேறு யாருடைய தூண்டுதலிலும் தொடரப்பட்டது அல்ல, நான் யாருக்கும் பினாமி அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க கூடாது என்று ஆம்ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஸ்டாலின் தூண்டுதலால்தான் வசீகரன் வழக்கு தொடர்ந்தார் என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.