சென்னை: 25 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் முகவரி கொண்ட போலி பாஸ்போர்ட்டில் வந்ததைக் கண்டறிந்த சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அப்பெண்ணை இது குறித்து விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு (டிச.31) வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் முகவரியுடன், ஜல்குரி வில்லாகி என்ற பெயருடன் 25 வயது இளம்பெண் ஒருவர், வங்கதேசத்திற்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பி வந்தார். அந்த இளம்பெண்ணின் இந்திய பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகளுக்கு, இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், அந்த இளம்பெண்ணை வெளியில் விடாமல், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு அவருடைய பாஸ்போர்ட்டை, கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.
இதை அடுத்து பெண் குடியுரிமை அதிகாரிகள், அந்த இளம்பெண்ணை நீண்ட நேரமாக, துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண்ணின் உண்மையான பெயர் ஷார்மின் அக்தர்(25). அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் இவர், மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து, மத்தியப் பிரதேச மாநிலம், போபால் சென்று, சில ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து போலியான, இந்திய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுத்து, இந்திய பாஸ்போர்ட்டை போலியாக பெற்றுள்ளார். அந்தப் போலி பாஸ்போர்ட் மூலம், வங்கதேசத்திற்கு சென்ற ஷார்மின் அக்தர், மீண்டும் அதே போலி பாஸ்போர்ட்டில் டாக்காவில் இருந்து, சென்னை வந்துள்ளது தெரியவந்தது.
இதை அடுத்து போலி பாஸ்போர்ட்டில், டாக்காவில் இருந்து சென்னை வந்த வங்கதேச இளம்பெண்ணை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். அதோடு இளம்பெண்ணை, ஒன்றிய உளவுப் பிரிவு அதிகாரிகள், தீவிரவாதிகளை கண்காணிக்கும் கியூபிராஞ்ச் அதிகாரிகள் (Q branch police), குடியுரிமை பிரிவில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த இளம்பெண் எதற்காக இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கினார்? டாக்காவுக்கு சென்று விட்டு, மீண்டும் இந்தியாவில், சென்னைக்கு வர வேண்டிய காரணம் என்ன? இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதா? போலியான இந்திய ஆவணங்கள் இவருக்கு எப்படி கிடைத்தன? என்ற பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் பின்பு வங்கதேச இளம்பெண்ணை, மேல்விசாரணை, நடவடிக்கைக்காக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று (டிச.31) அதிகாலை வங்கதேச இளம்பெண், சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். வங்கதேச இளம்பெண் ஒருவர் போலி பாஸ்போர்ட்டில், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தாரா முன்னாள் ராணுவ வீரர்?