சென்னை: ‘பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் நிவேதா ஜெஸ்ஸிகா. இவர் தீவிர அஜித் ரசிகையாவார். இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல் துறை ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “மே 10ஆம் தேதி இரவு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச்செல்லும் போது, கறுப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து பின் தொடர்ந்தார்.
ஒல்லியான உருவம் கொண்ட அந்நபர் ஆலந்தூர் வரை பின்தொடர்ந்து வந்தார். அதன் பின் அவர் சென்று விட்டார். பின்னர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று இச்சம்பவம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தேன். அந்நபர் சென்றுவிட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது , மீண்டும் அந்நபர் என்னைப் பின் தொடர்ந்தார்.
சரியாக ஒரு மணியளவில் கருணீகர் தெரு, லக்கி கல்யாண மண்டபம் பகுதியைக் கடந்து செல்லும்போது அந்நபர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். மேலும், எனது செல்போனையும் பறிக்க முயன்றார். இதனால், நான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை அவ்வழியாக வந்த பசு மீது மோதிய நிலையில், எனது செல்போனை கீழே தவறவிட்டேன். என்மீது தவறாக நடந்துகொண்ட அந்த இளைஞர், தைரியமாக நான் இப்படித்தான் நடந்து கொள்வேன் என மிரட்டிச் சென்றார்.
பின்னர் அந்நபர் யார் எனக் கண்டறிய அவரை துரத்திச்சென்றேன். ஆனால், அந்நபர் தப்பிச் சென்று விட்டார். அந்த சமயத்தில் காவல் துறை வழங்கிய அவசர எண்ணான 112-ஐ தொடர்பு கொண்டேன். ஆனால் எந்தவித பதிலும் காவல் துறையிடம் இருந்து கிடைக்கவில்லை. பயன்படாத இந்த அவசர எண் எதற்காக கொண்டு வந்தார்கள் எனத் தெரியவில்லை.
அதன்பின் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தேன். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் மூன்று கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து அந்நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெஸ்ஸிகா பதிவிட்டார். மேலும், இது போன்று எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாது எனவும் தனது கருத்தைத் தெரிவித்தார்.
ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவத்தைப் பதிவு செய்த அப்பெண் டிஜிபி, தமிழ்நாடு காவல் துறை போன்ற ட்விட்டர் பக்கங்களை டேக் செய்து வெளியிட்டார். இந்தப் புகார் சம்பவம் நடந்த உடனேயே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்பிறகு மாநில கட்டுப்பாட்டு அறையின் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து, அவசர எண் செயல்படாதது குறித்து நிவேதா-விடம் கேட்டுள்ளனர்.
தொடர்ந்து, சென்னை காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து விட்டதாகவும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தனியாக செல்லும் போது தற்காப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்களை கொண்டு செல்ல வேண்டுமெனவும், எத்தனை நாள்கள் பெண்களையே பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுரை கூறுவது, ஆண்களுக்கு தான் அறிவு வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தவுடன் என்ன உடை அணிந்து சென்றாய் எனப் பல பேர் கேள்வி கேட்டதாகவும், சுடிதார் அணிந்து தான் சென்றேன்; அப்போதே இந்த சம்பவம் நடந்திருப்பதாக அப்பெண் விளக்கமளித்துள்ளார்.
பெண்கள் நேராக சென்று புகார் அளிக்க பயமாக இருந்தால் ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கலாம் என்றும்; உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமணமான ஏழே மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!