சென்னை: ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனி 1-வது தெருவில் பிருந்தாவன் என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தை த.மா.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராணி கிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகின்றார். 6 முதியோர்கள் தங்கியுள்ள இந்த இல்லத்தில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ஜெயந்தி(35) என்ற பெண், இங்கு உதவியாளராகப் பணிக்கு சேர்ந்துள்ளார்.
கணவரை இழந்த ஜெயந்திக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், இந்த முதியோர் இல்லத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை ஜெயந்தி 3ஆவது மாடியில் உள்ள சமையல் அறையில் டீ போட்டுக்கோண்டிருந்த போது திடீரென அவரது புடவையில் தீப்பிடித்ததால் பதற்றமடைந்த ஜெயந்தி, என்ன செய்வது என தெரியாமல் ஓடும் போது 3ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
ஜெயந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த முதியோர் இல்ல மேலாளர் விவேக், உடனே ஜெயந்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். நேற்று இரவு ஜெயந்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் ஜெயந்தி உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து முதியோர் இல்ல மேலாளர் விவேக், மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பசுபதி பாண்டியன் குரு பூஜை: போலியாக நன்கொடை ரசீது அச்சடித்து வசூல் - மூவர் கைது