சென்னை: வியாசர்பாடி சாஸ்திரி நகர் ஒன்றாவது தெருவில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களைச் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.10) அவ்வழியாக முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கையில் கத்தியுடன், சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சாலையில் நின்றிருந்த பொதுமக்களைக் கத்தியால் வெட்டி மாமூல் கேட்டால் தர வேண்டும் என மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். பின்னர் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களை அந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் இதே கும்பல் பிவி காலனி, எருக்கஞ்சேரி பகுதி என சுமார் 5க்கும் மேற்பட்ட தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற எம்கேபி நகர் போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முயன்ற போது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. போதை ஆசாமிகள் நடத்திய இந்த தாக்குதலில் புளியந்தோப்பைச் சேர்ந்த நவீன் (24), வியாசர்பாடியை சேர்ந்த லோகநாதன், எம்கேபி நகரை சேர்ந்த கோபி, கொடுங்கையூரைச் சேர்ந்த இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி காயத்ரி ஆகியோருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட கண்ணன், ராயல் ஆல்பர்ட் உள்ளிட்ட 10 பேர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிகள் மடிப்பாக்கம் செல்வம் மற்றும் வில்லிவாக்கம் ராஜேஷ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்த நபர்கள் என்பது தெரியவந்தது.
சிறையிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருப்பதால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் இவர்கள் மாமூல் கேட்டபோது தரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குப் பயத்தைக் காட்டி, மீண்டும் தங்களது கெத்தை நிலைநாட்டி மாமூல் வசூலில் ஈடுபட ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக்கொலை: பின்னனி என்ன?