சென்னை: தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (23), விக்னேஷ் (17), விஜய் (17) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சோமங்கலத்தில் இருந்து கிஷ்கிந்தா செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது சாலை வளைவு பகுதியில் அதிக வேகமாக திரும்பியபோது அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் மூன்று இளைஞர்களுக்கும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற விக்னேஷ் என்பவருக்கு தலை, வலது கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சோமங்கலம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Chennai Police Encounter: சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!
அதேபோல் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருத்திக் குமார் (20) என்னும் நபர், மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை 31) கல்லூரியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, நடுவீரப்பட்டு அருகே அதிவேகமாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் லாரியை வழியிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவரது உறவினர்கள் லாரியை சிறை பிடித்தனர். மேலும் அவர்கள், காலை மற்றும் மாலை நேரத்தில் அதிகப்படியான கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற சோமங்கலம் போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். நேற்று ஒரே நாளில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரு விபத்துகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!