சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி, தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. இந்த நிலையில், ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட போது அதிக சத்தம் ஏற்பட்டதால், அந்த சத்தத்தைக் கேட்டு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அங்குக் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து, பணிமனையிலிருந்து வெளியே வந்த ரயில் எப்படி தடம் புரண்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை என்றும் பணிமனையிலிருந்து சென்ட்ரல் ரயில் நோக்கிச் சென்ற ரயில் இது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாததாகவும், ரயில் சேவைகளிலும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ள இந்த ரயில் சக்கரங்களை, தண்டவாளத்தின் மேல் தூக்கி வைக்கும் பணிகள் உடனடியாக ரயில்வே ஊழியர்கள் செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவ்வாறு திடீரென ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக-விற்கு இணங்காத மாநிலங்களைப் பிடிக்க இதுதான் திட்டம்.. ஜம்மு & காஷ்மீர் தீர்ப்பே உதாரணம் - உ.வாசுகி குற்றச்சாட்டு!