சென்னை: சென்னை ஐஐடியில் மார்ச் 31தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு சச்சின் ஜெயினின் ஆராய்ச்சி வழிகாட்டித் தான் காரணம் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மாணவர் மரணம் தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பதாக ஒப்புக்கொண்டது.
அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்களால் அதிருப்தி அடைந்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பாக விசாரணை செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி ஐபிஎஸ் தலைமையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சபீதா,கண்ணகி பாக்கியநாதன உள்ளிட்டோர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கியது.
இந்த குழுவானது ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் ஏன் நிகழ்கிறது என்ற கோணத்தில் விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஐஐடியில் தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்கள், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் என 30 க்கும் மேற்பட்ட நபர்களிடம் கடந்த ஒரு வாரத்தில் இக்குழுவானது நேரடியாக விசாரணை மேற்கொண்டது. கூடுதலாக 20 பேரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் பலர் தாங்களாகவே விசாரணைக்கு முன் வருகின்றனர் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அம்மாணவர்களின் நலன் கருதியும் எதிர்காலங்களை முன்னிருத்தியும் மேலும் இது போன்று பல மாணவர்கள் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஆஜராகவும், மாணவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என ஐஐடி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி நிர்வாகம் தரும் அழுத்தமானது மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக விசாரணை குழு முன் மாணவர்கள் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த விசாரணைக் குழுவானது ஐஐடி நிர்வாக பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுவின் அறிக்கை ஐஐடியின் நிர்வாகத்திடம் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: சென்னையில் சித்த மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி; 2 பேர் உயிரிழப்பு!