சென்னை: அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பிரதான சாலையில் இன்று (நவ.13) அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நின்றவர்கள், தூய்மைப் பணியாளர் மற்றும் சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் என 6 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் இருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரில் மூன்று நபர்கள் பயணித்ததாகவும், அதில் இருவர் தப்பிய நிலையில், காரில் இருந்த ஒருவரைப் பிடித்து மக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மது போதையில் காரை அதிவேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
சிசிடிவி காட்சியில், இரண்டாவது அவென்யூ சாலையில் அதிவேகமாக வந்த கார், முதலில் சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி சுழன்றவாறு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் மீதும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது தெரிய வந்துள்ளது. மேலும், அதிவேகமாக காரை இயக்கியதுதான் விபத்துக்கு காரணமாகும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பச்சிளம் குழந்தைகளின் சருமத்திலும் ஏற்படும் வறட்சி.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?