சென்னை: 2016ம் ஆண்டு விஜயின் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் இன்டர்வெல் பிளாக்கை யாரும் மறந்திருக்க முடியாது. 2014ஆம் ஆண்டு சிறுசேரியில் பெண் ஐ.டி. ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட காட்சிதான் அது. இந்த சம்பவத்திற்கு சொந்தக்காரர் இன்று மரணமடைந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். இதே பெயரைத்தான் நாயகனுக்கும் வைத்து அழகு பார்த்திருப்பார் இயக்குநர் அட்லீ. அப்போது காஞ்சிபுரம் எஸ்.பி.யாக இருந்த விஜயகுமார் இவ்வழக்கை விசாரித்து வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை சிறப்பாக புலனாய்வு செய்து கைது செய்தார்.
இதுமட்டுமின்றி தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் காட்டப்படும் பவாரியா கொள்ளையர்களைப் பிடித்த போலீஸ் குழுவிலும் விஜயகுமாரின் பங்கு இன்றியமையாதது. பின்னர் அண்ணா நகர் துணை ஆணையராக விஜயகுமார் இருந்த போது அரும்பாக்கத்தில் வங்கியில் 20 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார்.
அதன் பிறகு சி.பி.சி.ஐடி எஸ்.பி.யாக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்.சி குரூப்1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு, சுரானா வழக்கில் சி.பி.ஐ. வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கு உள்ளிட்டப் பல வழக்குகளை விஜயகுமார் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ததால், உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்றார்.
மறைந்த டிஜஜி விஜயகுமார் ஐபிஎஸ் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், அணைக்கரைப்பட்டி கிராமத்தில் 1976-ல் பிறந்தவர். இவரது தந்தை செல்லையா வி.ஏ.ஓ ஆகவும், தாயார் ராஜாத்தி பள்ளி ஆசிரியையாகவும் இருந்தவர்கள்.
கல்லூரியில் படிப்பை முடித்ததும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்விற்கு 1999-ல் விண்ணப்பித்த நிலையில், அதிலும் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தீவிரமாகப் படித்து அதில் வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து, 2000-ல் இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பதவியில் அமர்ந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையிலும் சென்று தோல்வியைக் கண்ட விஜயகுமாருக்கு இறுதி வாய்ப்பாக ஏழாவது முறையில் வெற்றி பெற்றார். முன்னதாக, டிஎஸ்பி பணியில் இருந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் சிபிசிஐடி, சென்னை காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி உள்ளிட்ட இடங்களுக்கு இவர் பணிமாறுதல்கள் பெற இந்த சிவில் சர்வீஸ் தேர்வும் ஒரு காரணமாகவே அமைந்தது எனலாம்.
தமிழ்நாடு காவல்துறையில் இருந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த விஜயகுமார் ஐபிஎஸ் தேர்வு எழுத அனுமதி கேட்டு சென்றபோதெல்லாம் அவருக்கு இது போன்ற பணியிடமாற்றங்களே பரிசாக கிடைத்தன. இருப்பினும், அவற்றையும் மிக சாதுர்யமாக விஜயகுமார், கடந்துவந்து காவல்துறையில் உள்ள அனைவரையும் மூக்கின் மீது விரலை வைத்து வியக்குமாறு ஐபிஎஸ் ஆகி தனக்கு வந்த சோதனைகளையும் தாண்டி சாதனைப் படைத்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் (UPSC Exam) வெற்றி பெற்று ஐபிஎஸ் (IPS) அதிகாரியாக இந்திய காவல் பணியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வுபெற்ற விஜயகுமார் கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!