சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரிடம், தொலைந்த சான்றிதழ்களைப் பெற கட்டணத்தை ஏற்ற வேண்டாம் என்றும், அதே பழைய கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
இன்றைய தினம் அதற்கான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பார். மேலும் கட்டணம் உயர்த்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்விற்குப் பின்னரே பொறியியல் கலந்தாய்வு தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 17ஆம் தேதி மாலை பொறியியல் கலந்தாய்வு குறித்து கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், மாணவப் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
ஆன்லைன் கலந்தாய்வில் கடந்த காலங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு முற்றிலும் இந்த முறைகேடு தவிர்க்கப்பட்டது. பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இந்த கல்வியாண்டில் இருந்து பெண்களுக்கு உயர் கல்விக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். நடப்பு நிதியாண்டில் உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அவர்களது பள்ளியிலேயே பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வீட்டில் இருந்து தங்கள் கைப்பேசி மூலம் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும். இதற்காக 100 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். அதேநேரம் பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்தான போதிய விழிப்புணர்வு பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தபட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: TELCயின் முன்னாள் ஆயரின் ஊழல்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு