சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கம் ஆபீஸர்ஸ் காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்ற மணிகண்டன் (34). ஆட்டோ ஓட்டிவரும் இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துமுடிந்து விவாகரத்து ஆகியுள்ளது.
இவர் மீது, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மணிகண்டனுக்கும் அவரது மாமா ஆபிரகாம் மகன் கார்க் என்ற எட்வின் (25) என்பவருக்கும், ஏற்கனவே சொத்து தொடர்பாக தகராறு இருந்துவந்துள்ளது.
நேற்று(ஜூலை 19) மணிகண்டன், எட்வின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு எட்வினும் மணிகண்டனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது எட்வினிடம், 'உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்' என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
பின்னர் போதையில் எட்வின் வீட்டிலே மணிகண்டனும் தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்த எட்வின், ஏற்கனவே சொத்து தொடர்பாக பிரச்னை உள்ளது. தற்போது தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்கிறான்.
திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தன்னை கொலை செய்துவிடுவான் என பயந்து, அங்கிருந்த அம்மிக் கல்லை மணிகண்டன் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.
காலையில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆதம்பாக்கம் காவல் துறையினருக்குக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆதம்பாக்கம் காவலர்கள் மணிகண்டன் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய எட்வினை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆதம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடையில் வைத்திருந்த கல்லாப்பெட்டி திருட்டு: சிசிடிவி பதிவுகள்