இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பு, அவர் தாயார் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையில் தவறாகப் பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக நேற்று (மார்ச் 31) மாலை 6 மணிக்கு முன்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பாக ஆ.ராசாவிற்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆ.ராசா சார்பாக அவரது வழக்கறிஞர் பச்சையப்பன், ஆ. ராசாவின் விளக்கத்தை கடிதமாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் நேரில் வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், "தேர்தலுக்காக அதிமுகவினர், தான் பேசியதை பிரித்து பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஏற்கெனவே மன்னிப்புக்கேட்டுள்ளேன்" எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில், "ஆ.ராசாவின் பேச்சு பெண்களையும், தாய்மையையும் இழிவுபடுத்துகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. தேர்தல் விதிமுறைகளை மீறி இருக்கிறது. அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை" எனக் கூறி, 48 மணி நேரத்திற்கு பரப்புரை மேற்கொள்ளத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கியும், இதுபோன்று ஆபாசமாகவும் நாகரிகமின்றி பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு