சென்னை: தமிழ்நாட்டில் நில ஆவண மேலாண்மையை தணிக்கை செய்து மத்திய தணிக்கைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நில ஆவணத்தை மேலாண்மை செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வகையில் தமிழ் நிலம் தரவு தளத்தில் ஆதார் எண் இணைக்கப்படாததால் நிலப்பதிவேடு தளத்தில், நில உரிமையாளர்களை தனித்துவமாக கண்டறியும் ஏற்பாடு இல்லை என்று மத்திய தணிக்கைக்குழு கூட்டம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’DILRMP வழிகாட்டு நெறிமுறைகள் நிலத்தின் பினாமி / மோசடியான பணிப்பரிவு சரி பார்க்க ஆதார் ஒருங்கிணைப்பு இன்றியமையாதது. பயனாளிகளுக்கு நேரடி மானிய பரிமாற்றத்தை (DBT) மேம்படுத்துவதற்கும் அவசியம் என்று கூறுகிறது. நில உரிமையாளர்களுக்கு எதிராக தமிழ் நில தரவு தளத்தில் படிப்படியாக ஆதார் எண்ணை உள்ளிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நவம்பர் 2016ஆம் ஆண்டு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தணிக்கை வினாவிற்கு 2021ஆம் ஆண்டில் இத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் மாநிலத்தில் நிலப்பதிவு தரவு தளத்தின் ஆதார் ஒருங்கிணைப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு (செப்டம்பர் 2018) ஆதார் அங்கீகாரம் கட்டாயம் இல்லை என்பதால், நிலப் பதிவேடுகளில் இணையச் சேவைகளை பெறுவதற்கு நில உரிமையாளர்களிடமிருந்து அவர்களின் தகவல் அறிந்த ஒப்புதல் உடன் ஆதார் எண்களை பெறுவதற்கான உத்தரவுகளை வழங்குமாறு தமிழ்நாடு அரசிடம் துறை கோரி உள்ளது.
மாற்றாக நில உரிமையாளர்களை அடையாளம் காண வாக்காளர் அடையாள அட்டையை ஏற்றுக்கொள்வது என பரிந்துரைக்கப்பட்டது மற்றும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உத்தரவு எதிர்பார்க்கப்படுகிறது. துறை நடவடிக்கை எடுத்த போதிலும் தேவையான அரசு ஆணைகள் இல்லாத நிலையில் நில பதிவேடு தரவு தளத்தில் நில உரிமையாளர்களை தனித்துவமாக கண்டறியும் ஏற்பாடு இல்லை’ என மத்திய தணிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு மிரட்டல்; திமுக பேச்சாளருக்கு எதிராக ஆளுநர் மாளிகை தரப்பில் புகார்