சென்னை: கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வரும் திங்கட்கிழமை (அக் 31) பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, இன்று (அக் 28) பிற்பகல் 12.30 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கெட்ட கொசுக்களை அழிக்க கெடுதல் தராத கொசுக்கள்..!