சென்னை: தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்த ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் இராகவேந்திரா நகரத்தைச் சேர்ந்த யுவராஜூலு நாயுடு என்பவரது உடலுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் இராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர், யுவராஜூலு நாயுடு (61). இவர் கடந்த நவம்பர் 3 அன்று சாலை விபத்து காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர், கடந்த நவம்பர் 7 அன்று மாலை 5.52 மணியளவில் மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக மூளைச்சாவு அடைந்த யுவராஜூலு நாயுடுவின் மனைவி அணுசுயா அடுசுபல்லி, மகள் அடுஸ்மில்லி சிரேஷா, மகன் நிதிஷ் குமார் மிது மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து, குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில், யுவராஜூலு நாயுடுவின் இரண்டு கண்விழி, இரண்டு சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் மற்றும் இதய வால்வுகள் ஆகிய உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த யுவராஜூலு நாயுடுவின் உடலுக்கு நேற்று (நவ 9) தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பாக, மத்திய வருவாய் கோட்ட அலுவலர் பா.க்யூரி மற்றும் எழும்பூர் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி புரிந்து கொள்ள செய்த ஆராய்ச்சி என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி