திண்டுக்கல் மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளரின் 12 வயது மகள் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது.
இதைக் கண்டித்தும், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் முடித்திருத்தும் நிலையங்கள் இன்று (அக்.09) கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், சில இடங்களில், கடையடைப்பு போராட்டத்தோடு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
சென்னை: கிண்டி, ஆலந்தூர் காவல் நிலையம் அருகே மருத்துவர்கள் சமூக நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு அரசு சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரி: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்பாட்டத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தேவராஜ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தென்காசி: தென்காசி மாவட்டம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இவ்வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
கோவை: கோவை மாநகரில் 5000க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டிருந்தன. சில கடைகளின் முன்பு கருப்புக்கொடிகளும் ஏற்றப்பட்டிருந்தன.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், தமிழ்நாடு முடித்திருத்துவோர் தொழிலாளர் சங்கமும் இணைந்து முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டது.
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும், இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருநெல்வேலி: திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை, நெல்லை மாவட்ட சலூன் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நடத்தினர். இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி தாலுகா பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் பங்குபெற்றன.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு கடையடைப்புப் போராட்டம் நடத்திய முடித்திருத்துவோர் சங்கம்!