சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் திருமுல்லைவாயலில் உள்ள ஹோண்டா இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தை, 40 ஆயிரம் ரூபாய் முன்பணமாகச் செலுத்தி தவணை முறையில் வாங்கி உள்ளார்.
முதல் தவணைகூட கட்டாத நிலையில் வாகனத்தை வாங்கிய ஒரு சில தினங்களில் தொடர்ந்து அவ்வப்போது இன்ஜின் பகுதியில் பழுது ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ஷோரூமுக்கு கொண்டு வந்து இருசக்கர வாகனத்தைச் சரி செய்து வந்துள்ளார். எனினும் தற்போது வரை 3 மாதத்தில் நான்கு முறை பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நொந்து போன கார்த்தி ஷோரூமிற்கு வந்து கேட்டதற்கு ஊழியர்கள் சரியான பதிலளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
எனவே ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கார்த்திக் தனது புதிய பைக்கை ஷோரூமிற்கு எடுத்து வந்து வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு, ஒரு லிட்டர் பெட்ரோலை வாகனத்தின் மீது ஊற்றி வாகனத்தை இங்கேயே கொளுத்தி விடுவேன் என மிரட்டியதால் ஷோரூமில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து ஹோண்டா ஷோரூம் நிர்வாகிகள் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனை ஏற்காத கார்த்திக் தொடர்ந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஷோரூம் சார்பில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷோரூம் நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கார்த்திக்கிடம் சமரச பேச்சுவார்தை நடத்தினர்.
மேலும் இருசக்கர வாகனத்தின் பழுது நீக்கி தரப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கார்த்திக் சமாதானம் அடைந்தார். அடிக்கடி இருசக்கர வாகனம் பழுது ஏற்பட்டதை அடுத்து மனஉளைச்சலில் வாடிக்கையாளர் வாகனத்தைக் கொளுத்தி விடுவதாக கூறி மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஈபிஎஸ்-க்கு முக்கியத்துவம் இல்லை: தேர்தல் ஆணைய கடிதத்தை ஏற்க மறுத்த அதிமுக