சென்னை: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள அலுவகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் நாளான இன்று கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் அணி தலைவர்களை மட்டும் வைத்து மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு மூன்றாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் +2, 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியானது அடுத்த மாதத்திற்குள் மிகவும் பிரமாண்டமாக நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு தொகுதி வாரியாக மக்கள் பட்டியல் தரவுகளை சேகரிக்கவும்;விஜய் மக்கள் இயக்கம் சார்பில் படிவம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அந்த படிவத்தின் நிலை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட ஆலோசனையாக விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த அதற்கான மேற்கட்ட நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இன்று அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், நாகர்கோவில், செங்கல்பட்டு, அரக்கோணம், கள்ளகுறிச்சி, திருச்சி, காஞ்சிபுரம், தேனி, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு முதல் நாள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு நாட்களும் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டமானது புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 'தி கேரளா ஸ்டோரி பட விவகாரம்': தமிழ்நாடு, மே.வங்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!