சென்னை: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் வகையில் வரும் 20ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 10 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்படும் என பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதில், "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துள்ளது. ஆகையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கருத்தில் கொண்டு, மொத்தம் 9 மாவட்டங்களில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (HUD - Housing and Urban Development) தரப்பில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர் செவிலியர்கள் அடங்கிய 70 நடமாடும் மருத்துவப் பிரிவு குழுக்களை (MMU - Mobile Medical Unit) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வர். அதன்படி 20.12.2023 முதல் 29.12.2023 வரை 10 நாட்களுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் 120 நடமாடும் மருத்துவக் குழுக்களுடன் இணைந்து கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 70 நடமாடும் மருத்துவக் குழுக்கள், அத்தியாவசிய தொற்றுநோய் மருந்துகளுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் நியமிக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவப் பிரிவு குழுக்களின் விபரங்கள் பின்வருமாறு,
வ.எண் | மாவட்டம் | MMU எண்ணிக்கை | நியமிக்கப்பட்டுள்ள இடம் |
1 | மதுரை | 13 | திருநெல்வேலி |
2 | புதுக்கோட்டை | 7 | திருநெல்வேலி |
3 | சிவகங்கை | 12 | தூத்துக்குடி |
4 | தேனி | 8 | தூத்துக்குடி |
5 | திண்டுக்கல் | 7 | திருநெல்வேலி மாநகராட்சி |
6 | பழநி | 7 | தூத்துக்குடி மாநகராட்சி |
7 | பரமக்குடி | 6 | 3 குழு திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் 3 குழு தூத்துக்குடி மாநகராட்சி |
8 | அறந்தாங்கி | 5 | தென்காசி |
9 | ராம்நாடு | 5 | கன்னியாகுமரி |