சென்னை: வியாசர்பாடி சர்மா நகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலை திறப்பதற்காக இன்று காலை வழக்கம் போல் கோயில் குருக்கள் வந்த போது, பீரோவிலிருந்த துணிகள் கலைக்கப்பட்ட நிலையில், ஒரு நபர் கீழே படுத்து உறங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் நேற்றிரவு கோயிலுக்குள் நுழைந்து, கோயிலில் பீரோவில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் செல்ல உடைக்க முயற்சித்துள்ளார். பீரோவை உடைக்கமுடியாததால் அருகிலிருந்த மற்றொரு பீரோவை திறந்து பார்த்த போது அதில் துணிகள் மட்டும் இருந்ததால் அனைத்தையும் கலைத்து நகைகளை தேடிய போதும் கிடைக்கவில்லை.
பின்னர் நீண்ட நேரமாக அந்த நபர் பீரோவை உடைக்க முயற்சி செய்தும் முடியாததால் களைப்பில் அவர் அங்கேயே உறங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இவரை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட நபர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கிச்சூடு - காவல்துறை விளக்கம்