சென்னை: துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்புப் பயணிகள் விமானம் 117 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னைக்கு வந்துகொண்டிருந்தது.
அந்த விமானத்தில் நாகப்பட்டினத்தைச் சோ்ந்த மதா்ஸா பஷீா் (47) என்பவா் வந்துகொண்டிருந்தார். விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்துள்ளார்.
இதையடுத்து, விமான பணிப்பெண்கள் அவருக்கு அவசர முதலுதவி செய்ததோடு, விமானிக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தொடா்புகொண்டு தகவலைக் கூறி, மருத்துவக் குழுவை சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்கும்படி கூறினார்.
அந்த விமானம் இன்று காலை 4.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமானத்தில் தரையிறங்கியதும், மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் ஏறி, பயணியைப் பரிசோதித்தனர்.
ஆனால் பயணி மதா்ஸா பஷீா் விமான சீட்டில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் இருந்தார். இதையடுத்து அவா் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனால் விமானத்திலிருந்த சகப் பயணிகளும், விமான ஊழியர்களும் சோகமடைந்தனர்.
விமான நிலைய காவல் துறை விசாரணை
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் துறையினர் விரைந்துவந்து, உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அத்தோடு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதோடு நாகப்பட்டினத்தில் உள்ள பயணியின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த விமானம் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்குத் துபாய் புறப்பட்டுச் செல்லும். ஆனால் பயணி ஒருவர் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்துவிட்டதால், விமானத்தை முழுமையாகச் சுத்தப்படுத்திய பின்பு, தாமதமாக இன்று காலை 7 மணிக்கு துபாய்க்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: குற்றச்செயலைத் தூண்டும் வகையில் கானா பாடல் இருக்கக்கூடாது: காவல் துறை எச்சரிக்கை