காஞ்சிபுரம் மாவட்டம், மடிப்பாக்கம் கிராமத்தை பூர்விகமாக கொண்டு பெங்களூருவில் வசித்து வருபவர் நாகலிங்கம் மூர்த்தி (64). இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு சீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் மடிபக்கம் கிராமத்தில் உள்ள 2400 சதுர அடி நிலத்தை விலைக்கு வாங்கி 2200 சதுர அடி அளவில் வீடு கட்டியுள்ளார்.
பின்னர், கடந்த 1994 ஆம் ஆண்டு அலுவலக பணிமாறுதல் காரணமாக நாகலிங்கம் மூர்த்தி தனது வீட்டை ஜஸ்டீன் என்பவரிடம் பராமரிப்பு பணிக்காக கொடுத்துவிட்டு தனது குடும்பத்துடன் பெங்களுருவுக்கு சென்றுவிட்டார்.
நாளடைவில், நாகலிங்கம் மூர்த்தியின் மனைவி புற்றுநோயால் உயிரிழந்த காரணத்தால் இவருக்கு சொந்தமான வீட்டை வந்து பார்க்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு நாகலிங்கம் மூர்த்தி தனது வீட்டை பார்வையிடுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, ராஜாமன்னார் என்பவர் வேளச்சேரி சார் பதிவாளர் அலுவலத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து அவரது வீட்டை இடித்துவிட்டு 6 பிளாட்டுகள் கட்டி விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக நாகலிங்கம் மூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பி.கே பில்டர்ஸ் உரிமையாளர் ராகவன் என்பவர் நாகலிங்கமூர்த்தி போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணங்கள் தயாரித்து நாகலிங்கமூர்த்திக்கு சொந்தமான வீட்டினை தனது கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்த ராஜமன்னார் என்பவர் பெயருக்கு பொது அதிகாரம் கொடுத்தது போன்று பொது அதிகார ஆவணம் தயாரித்துள்ளார்.
அது மட்டுமின்றி, ராஜமன்னாருக்கு கொடுத்த பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி நாகலிங்கம் மூர்த்திக்கு சொந்தமான வீட்டை இடித்து விட்டு 6 பிளாட்டுகள் கட்டி விற்பனை செய்து சொத்தினை அபகரிப்பு செய்து தவறான முறையில் லாபம் அடைந்துள்ளனர் என்றும் தெரியவந்தது. பின்னர் ராஜா மன்னாரை காவல் துறையினர் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 4 ஏக்கர் நிலம் அபகரிப்பு - திமுக பிரமுகர் மகன் மீது பரபரப்பு புகார்!