சென்னை: மதுரவாயல் அருகே பணம் நெருக்கடி காரணமாக பெற்ற பிள்ளைகளை கொலை செய்துவிட்டு ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த எம்எம்டிஏ காலனியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவந்தவர் வழக்குரைஞர் ரவி. 2015ஆம் ஆண்டு, இவரது மகள்கள் ஐஸ்வர்ய பிரியதர்ஷினி (13), ஜெய கிருஷ்ண பிரபு (11) ஆகியோர் உடல் அழுகிய நிலையில் வீட்டினுள் இறந்து கிடந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர், ரவியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, குழந்தைகள், இருவரும் அவர்களது தந்தையால் கொலை செய்யப்பட்டிருப்பது காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காதல் திருமணம் செய்துகொண்ட ரவி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்துவந்துள்ளார்.
மேலும், வாடகைக்கு இருந்த வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் இக்கட்டான சூழல் ஏற்பட்டதால், போதிய பணமும் இல்லாததாலும், பிள்ளைகளை கவனிக்க முடியவில்லை. இந்நிலையில் பிள்ளைகள் இருவரையும் வீட்டினுள் வைத்து சிலிண்டரை வெடிக்கவைத்துவிட்டு, விபத்துபோல் இருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவியை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு அவர் வந்துசென்றதாகத் தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை வைத்து, மண்ணடியில் பதுங்கியிருந்த ரவியை தனிப்படை காவல் துறையினர் இன்று (செப். 24) கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் இளைஞரைக் கொலை செய்தவர்களின் சிசிடிவி காட்சி சிக்கியது!