வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகின்ற 29ஆம் தேதி உருவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுகுறித்த விரிவான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்குத் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள நிலையில், இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.