சென்னை: முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் - செல்வராணி தம்பதி. இவர்களின் மகன் மோகன் (19). அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.25) இரவு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர், மோகனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோகன் வீட்டை சோதனை செய்தபோது மோகனின் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அதில், இறப்பதற்கு முன்பாக பெண் ஒருவருக்கு கடைசியாக பேசியது தெரியவந்தது. அந்த உரையாடலில், தான் தூக்கிட்டு தற்கொலை செய்ய போவதாக மோகன் பேசி விட்டு தொடர்பை துண்டித்தது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் என்பதும், ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து நடத்திய விசாரணையில், இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. மோகன் இறந்த செய்தியை கேட்டதும் அழுதப்படியே காவல் நிலையம் வந்ந இளம்பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்தது தெரியவந்தது. அடிக்கடி இருவருக்கும் சிறு சிறு சண்டைகள் ஏற்படும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மாறி மாறி தற்கொலை செய்து கொள்ள போவதாக விளையாட்டாக மிரட்டி கொள்வதாக இளம்பெண் தெரிவித்தார்.
அதே போல் தான் இன்றும் நாளை என்னுடைய பிறந்தநாள் என்பதால் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு பேசி கொண்டு இருக்கும் போதே அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது, தான் தற்கொலை செய்ய போவதாக மோகன் கூறினார்.
எப்போதும் போல் விளையாட்டாக தான் கூறிகிறார் என்று நினைத்தேன் ஆனால் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். சிறுவயது காதலர்களின் விளையாட்டு வினையாகி கல்லூரி மாணவர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் விழுந்த கண்ணாடி.. நொடிப்பொழுதில் இளைஞர் பலி!