காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியைச்சேர்ந்தவர், ஜெயராமன்(29); எம்.காம் பட்டதாரி. குடும்பத்துடன் பீர்க்கன்கரணை காமராஜர் நகர் அண்ணா தெருவில் வசித்துக்கொண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ஜெயராமனின் சொந்த ஊரான உத்திரமேரூரைச் சேர்ந்த யுவராணி (24) என்ற பெண்ணை ஜெயராமன் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். யுவராணி உத்திரமேரூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இருவரின் காதல் விவகாரம் யுவராணி வீட்டிற்குத் தெரிய வந்தவுடன் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். அதோடு யுவராணி வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த யுவராணி உத்திரமேரூரில் இருந்து பெருங்களத்தூர் பீர்க்கன்கரணையில் உள்ள ஜெயராமன் வீட்டிற்கு வந்து ஆள் இல்லாத நேரத்தில் இருவரும் ஒரே புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து ஜெயராமனின் பெற்றோர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற பீர்க்கன்கரணை போலீசார் இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே புடவையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பகலில் குப்பை சேகரிப்பு... இரவில் திருட்டு.! இளைஞர் கைது...