சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள், வக்ஃப் சொத்துகளை பாதுகாத்தல், தனியார் சொத்துகளை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ்(Prime Minister Jan Vikas Karyakram Scheme), 10 மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள், தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதலுக்கான தமிழ்நாடு அரசு மானிய உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், மானியம் 2021-2022 ஆம் ஆண்டில் 6 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
2022-2023 ஆம் ஆண்டில் தொன்மையான பள்ளிவாசல், தர்காக்களை புனரமைக்க ரூ.6 கோடியும், தொன்மையான தேவாலயங்களை புனரமைக்க ரூ.6 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜனவரி 13 அன்று சட்டப்பேரவையில் பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைக்க வழங்கப்படும் மானியத் தொகை 2023-2024 ஆம் ஆண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
வக்ஃப் சொத்துகள் பாதுகாத்தல் மற்றும் தனியார் சொத்துக்களை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில், வருவாய்த்துறை செயலாளர், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், நில நிர்வாக ஆணையர் மற்றும் பதிவுத் துறை தலைவர் ஆகியோருடன் நவம்பர் 29, 2022 அன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த முக்கிய முடிவுகள் பின்வருமாறு.
- வக்ஃபு வாரியத்தின் தரவுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். வருவாய் பதிவேடுகளுடன் தரவுகள் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும்.
- வருவாய்த்துறை பதிவேடுகள் மற்றும் வக்ஃபு வாரிய பதிவேடுகளில் சிறிய வேறுபாடுகள் இருப்பின், மாவட்ட ஆட்சியர் அளவில் தீர்வு செய்யப்பட வேண்டும்.
- மாவட்ட அளவில் வருவாய், வக்ஃபு பதிவேடுகளில் பெரிய அளவில் சிக்கல்கள், வேறுபாடுகள் இருப்பின் அத்தகைய வழக்குகளை நில நிர்வாக ஆணையர், நில அளவைத் துறைக்கு (Survey and Settlement) / அரசிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.
- வக்ஃபு வாரியம் மற்றும் வருவாய்த் துறையின் சட்ட நிலைப்பாட்டில் பெரிய வேறுபாடுகள் இருந்தால் அல்லது சட்டத் துறையின் விளக்கம் தேவைப்பட்டால் அத்தகைய வழக்குகளை பொருத்தமான முடிவுகள் எடுப்பதற்காக மாநில அரசிற்கு பரிந்துரைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள்": அமைச்சர் எல்.முருகன்