தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது என்று, நேற்று உத்தரவு போடப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து இன்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் அனைவருக்கும் நன்றி. இருப்பினும், ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுவதில்லை.
பொதுமக்கள் இந்தக் கொடிய நோயின் வீரியத்தை உணர்ந்து வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். ஊரடங்கை முழுமையாக நாம் பின்பற்றினால், இந்தக் கொடிய நோயிலிருந்து வெளியே வர முடியும். தன்னார்வலர்கள், பொது மக்களுக்கு உதவ எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
வழிமுறைகள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உதவி செய்ய எவ்விதத் தடையுமில்லை. ஆனால் காவல் துறை, மாநகராட்சி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை அணுகி உதவலாம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி, சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள்: விரட்டியடித்த இளைஞர்கள்