சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது நேற்று (டிச 17) முதல் அதிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளமாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான வெள்ளம் காணப்படுகிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போலக் காட்சியளிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியின் ஒருபகுதியாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், ஏற்கனவே இன்றைய (டிச 18) தினம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அதேபோல் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது வரையிலும் மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து வருவதாலும் தென்மாவட்டங்களில் நாளை (டிச 19) வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதாலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச 19) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் நாளை (டிச 19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரயில் நிலையங்களைச் சூழ்ந்த மழைநீர்: ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கிய பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கிய மீட்புக்குழு!