NEET Issue:சென்னை: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேரவையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, ’வேப்பனஹள்ளி பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தக் கூடாது என கோரிக்கை வைத்தேன். அமைச்சர் விளக்கம் அளித்தபோது விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்றார்.
ஆனால், தற்போது 3200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு ஒரு ஏக்கருக்கு ரூ.34 லட்சம் தருகின்றனர். ஆனால், உரிய நஷ்ட ஈடு வழங்கவில்லை. ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு தொழிலதிபர்களுக்கு அரசு விற்கிறது’ என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்: 'தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்கும் பணி அதிமுக ஆட்சியிலும் நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது. கையகப்படுத்தும் நிலத்தை அரசு மேம்பாடு செய்கிறது. தொழிற்பேட்டைக்கான மின்வசதி, சாலை உள்ளிட்ட வசதிகளை செய்கிறது. இது சரியான கருத்து அல்ல. ரூ.34 லட்சத்துடன் சேர்த்து கூடுதலாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
ஆளுநர் உரையில் ....(சபாநாயகர் குறுக்கீடு) ஆளுநரைப்பற்றி பேசாதீர்கள்...சமூக வளர்ச்சி குறியீட்டு அறிக்கையில் 50 ஆண்டுகள் காலத்தில் தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 30 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. எம்ஜிஆர் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்திருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார்’. அப்போது நீட் தேர்வு விவகாரத்தை பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ’நீட் தேர்வு எப்போது வந்தது என்பது தெரியாதா? மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கொண்டு வரப்பட்டது’ என்றார்.
அதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, 'தமிழ்நாட்டுக்குள் நீட் நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர், யாருடைய ஆட்சியில் நீட் வந்தது’ எனக் கேள்வி எழுப்பினார். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி 'மத்திய அரசுதான் கொண்டு வந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது' என்றார். அதற்கு முதலமைச்சர், 'திமுக இருந்தவரை தமிழ்நாட்டில் நுழையவிட்டோமா? அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நுழையவிட்டாரா?' என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி: 'உச்ச நீதிமன்றம் தீர்ப்பு படி தான் அமல்படுத்தினோம். அதை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? கலைஞர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கவில்லையா?' என்ற எடப்பாடி பழனிசாமி, ’எங்களுக்கும் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பது தான் எங்களது கோரிக்கை’ என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ’2021 ஜன 4ஆம் தேதி காலாவதியான சட்டத்தை கொண்டு வந்து வழக்கு நடத்தினார்கள். நாங்களும் வழக்கு தொடுத்தோம் என்பன ஏற்படையது அல்ல. இது மாணவர்களுக்கு எதிராக அமையும், நீட்தேர்வு தடை சட்டத்தை குடியரசுத் தலைவர் திரும்பி அனுப்பியதை மறைத்தது எதிர்க்கட்சி தலைவரை சாரும். ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இரண்டாவது முறையாக தீர்மனம் போடப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமி: 'என்னை சாரும் என்பதை நீக்க வேண்டும். என்னை குற்றம்சாட்டக்கூடாது. அரசுக்கு வழக்கு நடத்த திராணி இல்லை. வேண்டுமென்றே தவறான தகவலை பேசுகின்றனர். நீட் தேர்வுக்கு பிள்ளையார்சுழி போட்டது காங்கிரஸ் கட்சி தான், நாங்கள்தான் எதிராக தீர்மானம் போட்டோம்' என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்: 'குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பினாரே, அதை தமிழ்நாடு மக்களுக்கு சொன்னீர்களா? முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம்’ என்றார்.
முதலமைச்சர்: 'நான் சொன்னது ஒன்றிய அரசு காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால், திமுக எதிர்த்தது. அதனால் தான் தமிழ்நாட்டில் நீட் நுழையவில்லை. இதுதான் உண்மை' பின்னர் சபாநாயகர் அப்பாவு நீட் குறித்து பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நீட் தேர்வு குறித்து பேசுவது தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க:’எங்க தொகுதியில் அப்படி எதுவும் நடக்கவில்லையே’ - சபாநாயகர் கேள்வி