சென்னை:விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் தனியார் அப்பார்ட்மெண்ட் ஒன்று அமைந்துள்ளது. அந்த அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் சாய் கிராணா(7) என்ற சிறுமி வசித்து வருகிறார்.
இன்று(பிப்.16),பெற்றோர் வெளியே சென்றதால் சாய் கிராணா வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் அறையின் உட்புறம் தாழ்பாள் மாட்டிக்கொண்டதால் சிறுமியால் கதவைத் திறக்க முடியாமல் வெளியே வரமுடியாமல் பதறியுள்ளார்.
மேலும், ஜன்னல் வழியாக சிறுமி, காப்பாற்றுமாறு குரல் கொடுத்து வந்துள்ளார்.அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் தாழ்ப்பாளைத் திறக்க முயற்சி செய்துள்ளனர். திறக்க முடியாததால் விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மூன்றாவது மாடியில் சிக்கித்தவித்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர் அகஸ்டின் அமர்நாத் நீட்டிப்பு ஏணியை போட்டு உயிரை பணையம் வைத்து ஜன்னல் வழியாக ஏறியுள்ளார். பின்னர் சிறுமி சிக்கிய அறைக்குள் குதித்து பாதுகாப்பாக சிறுமியை மீட்டு கீழே இறக்கி வந்தார். இதனைக் கண்ட குடியிருப்புவாசிகள் தீயணைப்பு வீரர்களை வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க:'நீட் சமூக நீதிக்கு எதிரானது' - அன்புமணி ராமதாஸ்