சென்னை: தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்து முற்றிலும் வேறு ஒரு பொருளாக மாற்றுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே தற்போது வரைக்கும் அதிக அளவில் மறுசுழற்சி செய்து வருகின்றனர்.
உலகில் கிட்டத்தட்ட 15 கோடி டன் பிளாஸ்டிக் ஆண்டுதோறும் உற்பத்தியாகிறது. இதில் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் தள்ளப்படுகிறது. மீதம் உள்ளதை பூமியிலும், மேலும் எரிக்கவும் செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க மறுசுழற்சி என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது ஆகும்.
தற்போதைய காலத்தில் பிளாஸ்டிக்கைத் தவிர தேவையற்ற டி ஷர்ட், ஷூ, உடைந்த பூ ஜாடி ஆகியவற்றை தூக்கி எறியாமல் அதைப் பயன்படுத்தும் வகையில் மறுசுழற்சி செய்து வீட்டை அலங்காரம் செய்து வருகின்றனர். இந்த வகையில் சென்னை கீழ்பாக்கம் பகுதியைச்சேர்ந்த சிருஷ்டி குசேரியா (Srishti Kucheria) என்னும் 17 வயது மாணவி, வீட்டில் தேவையற்ற அல்லது கிழிந்த டி ஷர்ட், ஷூ, ஜீன்ஸ் போன்றவற்றை தன் கைவண்ணத்தால் மீண்டும் பயன்படுத்தும் பொருளாக மாற்றிவருகிறார்.
தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவிக்கு சிறுவயது முதலே வண்ணங்களால் ஈர்க்கப்பட்டு இந்த கரோனா ஊரடங்கின்போது ஆன்லைன் மூலமாக தன் திறமையை வளர்த்துக்கொண்டார். சிருஷ்டி குசேரியா-வின் சகோதரர் ஒருநாள் தனது பழைய ஷூ-வை தூக்கி எறிய நினைத்திருக்கிறார். அப்போது, அதை வாங்கி தன் கைவண்ணத்தால் அந்த ஷூ-விற்கு மறு வடிவம் கொடுத்துள்ளார்.
அதைப்பார்த்த சிருஷ்டி குசேரியா-வின் சகோதரர் அந்த ஷூ-வை மீண்டும் பயன்படுத்தத்தொடங்கிவிட்டார். இத்துடன் அச்சுக்கலை (TYPOGRAPHY) நன்றாக பண்ணுவதால் இரண்டையும் சேர்த்து ஒரு தொழிலாக தொடங்கலாம் என்று தொடங்கி, மறுசுழற்சி செய்யும் பொருள்களை இணையதளம் மூலம் ஏற்ற விலையில் விற்று வருகிறார்.
இதுகுறித்து பேசிய சிருஷ்டி குசேரியா, "மறுசுழற்சி (Upcycle with Usable art) என்ற அடிப்படையில் நான் இது போன்று செய்து வருகிறேன். ஒரு பொருள்களுக்கு மதிப்பு இல்லை என்று தூக்கிப்போடுகின்றனர். நான் அதற்கு வண்ணம் தீட்டி, அதன் பாதிப்பைக் கூட்டுகிறேன். இதன்மூலம் குப்பைகளைக்குறைக்க முடியும். நான் டி ஷர்ட், ஷூ, பைகள், கவர்கள், ஜீன்ஸ் உள்ளிட்டப்பொருள்களை வண்ணங்கள் தீட்டி மறுமுறை பயன்படுத்தும் வகையில் செய்வேன்.
பள்ளிக்கூடத்தையும் இந்த வேலையையும் செய்வது சற்றும் கடினம் தான். இருப்பினும் ஓரளவு சமாளித்து விடுகிறேன். மக்கள் மூன்று விடயங்களை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் reduce, reuse and recycle. ஆனால், நான்காவது ஒன்று Rethink என்பதை அவர்கள் நினைக்க வேண்டும். ஏனென்றால், தூக்கிப்போடும் முன் யோசிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மக்கள் தேவை அல்லது எதை செய்ய சொல்கிறார்களோ அதை நான் செய்து கொடுப்பேன். குறிப்பிட்டு இதை தான் செய்வேன் என்று இல்லை. அவர்கள் தேவையை நான் பூர்த்தி செய்வேன்" என்றார். மக்கள் தேவையற்றது என நினைத்து தூக்கி எறியும் பொருள்களுக்கு, மாணவி வண்ணம் தீட்டி அதன் மதிப்பைக்கூட்டமுடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய் : ஒரு அதிசய சம்பவம்!!