சென்னை: புரசைவாக்கம் தாண்டவன் தெருவில் வசித்து வரும் கோடீஸ்வரன் (40), அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள சதக் மெட்ரிகுலேசன் பள்ளியில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று (ஆக. 21) பள்ளியினுள் இருந்து ஏதோ சத்தம் வந்ததால், கோடீஸ்வரன் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை சோதனை செய்தார்.
ஆண்களுடன் பெண்
அப்போது பேருந்து ஒன்றின் உள்ளே நான்கு நபர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோடீஸ்வரன், அவர்களைப் பிடிக்க முற்பட்டுள்ளார்.
அப்போது பேருந்தில் இருந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அதில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரை கோடீஸ்வரன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மிஷப்பேட்டை, ஜான்கான் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரின் 16-வயது மகள் எனத் தெரியவந்தது. அவர் ஆண் போல் தோற்றம் கொண்டவராய் இருந்துள்ளார்.
டிக் டாக் எடுக்க வந்தாரா?
ஆண் போல் தோற்றம் கொண்ட அந்தப் பெண்ணிடம், மேலும் விசாரணை செய்தனர். அதில், அப்பெண் மிஷப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வருவதும், அவரின் ஆண் நண்பர்களான கார்த்திக், நிஜாம், தேவா ஆகியோர்களுடன் டிக்டாக் செய்வதற்காக நேற்று (ஆக 21) இரவு இருசக்கர வாகனத்தில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
மேலும் டிக் டாக் எடுத்து முடித்த பின் அரும்பாக்கத்தில் உள்ள முகமது சதக் பள்ளியின் சுவரில் ஏறிக் குதித்து உள்ளே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் ஆண் நண்பர்களுடன் உறங்கி உள்ளதும் தெரியவந்தது.
அதையடுத்து இன்று (ஆகஸ்ட் 22) பள்ளியின் காவலாளி வந்து பார்த்த போது, அவர் உடன் வந்த மூன்று ஆண் நண்பர்கள் தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் காவல் துறையினர், பள்ளி வளாகத்தில் ஏதாவது திருட வந்தார்களா என்ற கோணத்தில் அப்பெண்ணின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.