சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் ராயப்பேட்டை பகுதியில் வளர்ப்பு மீன்கள் கடை நடத்தி வருகிறார். அவருடைய நண்பரான காளிதாஸ் என்வருடம் கடந்த நான்கு வருடங்களாக பணம் கொடுக்கல், வாங்கள் இருந்து வந்த நிலையில் காளிதாசிடம் சிறுக சிறுக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பார்த்தசாரதி வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார்.
காளிதாஸ் அவருக்கு தெரிந்தவர்களிடம் பணம் பெற்று பார்த்தசாரதியிடம் கொடுத்து வந்ததும், வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அதற்கு அத்தாட்சியாக எழுதி தரும்படி கூறி அழைத்துள்ளனர். அப்பொழுது பார்த்தசாரதிக்கு நன்கு தெரிந்த பாலாஜி என்ற காவல் துறையினர் உடன் இருந்ததால் எந்த பயமும் இல்லாமல் காளிதாசுடன் பார்த்தசாரதி சென்றுள்ளார்.
முதலில் சென்னை மைலாப்பூர் அழைத்துச் சென்றதும் அங்குள்ளவர்கள் பேப்பரில் கையெழுத்து மட்டும் போடு உன்னை அடிக்க மாட்டோம் என்று கூறியதாகவும், அதன் பின்னர் காளிதாஸ் வேளச்சேரியில் உள்ள அவரது நண்பர் பிரவீன் என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது வேளச்சேரிக்கு அழைத்து வரும்படி கூறியதால் பார்த்தசாரதியை வேளச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் பிரவீன் உடைய ஆட்டோவில் அனைவரையும் அழைத்துகொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்குச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்கள் பார்த்தசாரதியை வற்புறுத்தி மது அருந்த வைத்த பின்னர் பிரவீன், காளிதாஸ் மற்றும் அங்கிருந்தவர்கள் பார்த்தசாரதியை கை மற்றும் பீர் பாட்டிலால் அடித்துக் கொடுமை படுத்தி துன்புறுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் பார்த்தசாரதியை அடிக்கும்போது சிதறிய ரத்தம் பிரவீன் காலில் பட அதை நாவினால் சுவைக்க சொல்லி அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். பின்னர், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி பார்த்தசாரதி கூறியதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மேலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் நீலாங்கரை காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே வாகனத்தில் நிறுத்திவிட்டுச் சென்றனர்.
பின்னர், வலியோடு தவழ்ந்து தவழ்ந்து மருத்துவமனைக்குச் சென்ற பார்த்தசாரதி அங்கு சிகிச்சைப் பெற்றுள்ளார். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த பார்த்தசாரதி, இந்த பிரச்னை குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பார்த்தசாரதி, கடந்த 21ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் காளிதாஸ், பிரவீன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் அது குறித்து பேசுவதாக அழைத்துச் சென்று பீர் பாட்டில்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தினுள்ளே துணிகரம்.. நெல்லை டவுண் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?