சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நிஷாந்த்(29), இவர் பள்ளியில் படிக்கும் போது வடபழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம் பெண்ணிடம் ரூ.68 லட்சம் வரை பணம் பெற்று கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதனிடையே, சென்னையில் உள்ள தொழிலதிபரின் மகள் ஒருவரை நிஷாந்த் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இது குறித்து நிஷாந்தின் காதலி மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த தொழிலதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தலைமறைவான நிசாந்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுக்கு செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் அனுப்பி விட்டு அவரது நண்பரின் காரில் சென்ற நிஷாந்த் போரூர் மேம்பாலத்தின் மீது நிறுத்தி விட்டு போரூர் ஏரியில் குதித்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்களும் கடந்த இரண்டு நாட்களாக ஏரியில் தேடி வந்தனர். ஏரியில் நிஷாந்தின் உடல் ஏதும் கிடைக்காததால் நேற்று தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினார்கள். இந்நிலையில், போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி செய்து போலீசாரால் தேடப்பட்டு வந்த நிஷாந்த் என்று போலீசார் உறுதி செய்தனர். ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிஷாந்தின் சடலம் 3 நாட்களாகிவிட்டதால் அழுகிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.