சென்னையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி, கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் நேற்று (செப். 21) காலையும் வழக்கம்போல் தனது ஆம்னி காரில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்குச் சென்றுள்ளார். அப்போது கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்றுகொண்டிருந்த காரிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
பெட்ரோல் நிரப்பியவுடன் தீ விபத்து
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழிறங்கி பார்த்துள்ளார். அப்போது காரின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அசோக் நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமானது.
பின்னர் இது குறித்து கோடம்பாக்கம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருகில் உள்ள பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சிறிது தூரம் சென்றதும் தீ விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: நீ வேணா சண்டைக்கு வா... போதையில் ஆடையின்றி தகராறில் ஈடுபட்ட காவலர்