சென்னை கொரட்டூர் போத்தியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர், சிலம்பரசன் (32). இவர் மீது ஏற்கெனவே கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பலமுறை கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சிலம்பரசன், தனது வீட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர், சிலம்பரசனை அரை கிலோ கஞ்சாவுடன் பிடித்தனர்.
இதன்பின்னர் சிலம்பரசனை கைது செய்ய முயன்றபோது, தன்னைக்கைது செய்துவிடாமல் இருக்க, வீட்டில் இருந்த பிளேடால் காவலர்களின் கண்முன்னே தனது கழுத்தில் தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிலம்பரசனை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு முதலுதவி பெற்ற சிலம்பரசன், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் கைது