சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. அவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 23 தேதி வரை மொத்தமுள்ள 13.33 இலட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.85 இலட்சம் உரிமையாளர்கள்(ரூ. 1,408.97 கோடி ) மட்டுமே சொத்து உரிமையாளர் சொத்து வரியினை செலுத்தி உள்ளனர்.
சொத்து வரியினை விரைவில் செலுத்த வேண்டும் என்பதற்காக கட் செவி தகவல் (Whats app), பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவியுள்ள அறிவிப்பு பலகைகளில் (Vishual Media Display), திரையரங்குகளில் சொத்து வரி தொடர்பாக விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்தக் கோருவது.
மேலும் அஞ்சல் துறை மூலம் அறிவிப்புகள் சார்வு செய்தல் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் சொத்துவரி செலுத்துமாறு சென்னை மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, சொத்துவரி அதிக நிலுவை வைத்துள்ள சொத்துவரி உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் “கட்டிடத்தின் உரிமையாளர் சொத்து வரியினை நீண்ட நாட்களாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்” என அறிவிப்புப் பதாகைகள் (Banners) மாநகராட்சி சார்பில் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் சொத்துவரியினை நிலுவையில் வைத்துள்ள முதன்மையான 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்று வசூல் செய்ய இயலாத பட்டியல் ஆகியவை மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் பட்டியலில் வேளச்சேரி, தி நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா தங்க நகை மாளிகை, ஹோட்டல் குரு உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் உள்ளது. நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்ற பட்டியலில் தன்ராஜ் பைட் ஜெயின் கல்லூரி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, பிருந்தா தியேட்டர், செல்லம்மா கல்லூரி, ஏ எம் ஜெயின் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரும் 27ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை என்ன.?