சென்னை: சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளில், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கல்வி முக்கியமானதாக உள்ளது. சிறைவாசிகளில் பெரும்பாலானோர் எழுதப் படிக்க தெரியாதவர்கள் என்பதால் சிறைகளில் பல்வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் வாழ்வாதார பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்டச் சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 90.93% மாணவர்கள் தேர்ச்சி..!
இதில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 9 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 203 சிறைவாசிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கோரிக்கையின் படி மாநில பள்ளிக் கல்வித்துறையால் சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிட வழிவகை செய்யப்பட்டது.
இன்று(மே.19) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 9 பெண்கள் உட்பட 200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளாதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 சிறைகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வினை தமிழ்நாட்டில் உள்ள 12,638 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
அதன்படி, சுமார் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.39 சதவீதமாக உள்ளது. அதில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.66 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி வீதம் 88.16 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.32 சதவீதம் அதிகரித்து, 91.39 சதவீதமாக உள்ளது.
இதையும் படிங்க: 10, 11ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு அறிவிப்பு