சென்னை: வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிற்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து ஒன்றிய அரசு 90,000 மெ.டன் யூரியா தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.747 லட்சம் எக்டரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 7.816 லட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரங்களின் தேவை
நடப்பு சம்பா (இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
ஒன்றிய அரசு, அக்டோபர் மாதத்திற்கு யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெ.டன், 4,480 மெ.டன் மற்றும் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெ.டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெ.டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது.
உரத்தேவை
டிஏபி 45,150 மெ.டன் உரத்தேவைக்கு 4,480 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை 11,781 மெ.டன் டிஏபி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பொட்டாஷ் உரத்தின் அக்டோபர் மாத உரத்தேவை 31,700 மெ.டன்னிற்கு பொட்டாஷ் 8,140 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுநாள் வரை 14,456 மெ.டன் பொட்டாஷ் உரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழி செய்திடவும், தமிழ்நாட்டில் உரத்தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு விவசாய பெருங்குடி மக்களின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு முதலமைச்சர் ஒன்றிய அரசின் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சருக்கு அக்டோபர் 21ஆம் தேதி யூரியாவினை உரித்த காலத்தே வழங்கிடவும், 20,000 மெ.டன் டிஏபி மற்றும் 10,000 மெ.டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்து குறைவின்றி வழங்குமாறு கடிதம் எழுதினார்.
90,000 மெ.டன் யூரியா ஒதுக்கீடு
முதலமைச்சரின் கடிதம் காரணமாக காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90,000 மெ.டன் இறக்குமதி யூரியாவினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
உள்ளூர் உர தயாரிப்பு நிறுவனங்களான ஸ்பிக் நிறுவனம் இதுநாள் வரை 25,212 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. எம்எப்எல் உர நிறுவனம் இதுநாள் வரை 26,185 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் 10,000 மெ.டன் மற்றும் எம்எப்எல் உர நிறுவனம் 8,000 மெ.டன் யூரியாவினை வழங்கிட திட்டமிட்டுள்ளன.
இருப்பில் 4,000 மெ.டன் யூரியா
காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4,000 மெ.டன் யூரியா ரயில் மார்க்கமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநரால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரத்தேவை தொடர்பான விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவில் உடனடி நடவடிக்கைகள் வேளாண்மைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: நகை பிரியர்களுக்கு நற்செய்தி