சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து வாடகை கார் ஓட்டுநர் வங்கி கணக்கிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமானதாக தகவல் கூறப்படுகிறது.
பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடம்பாக்கத்தில் நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ராஜ்குமார் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் போடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ண முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என குழம்பி உள்ளார்.
தனது வங்கிக்கணக்கில் 15 ரூபாய் தான் இருப்பு உள்ளது என்பதை அறிந்திருந்த அவர், யாரோ தன்னிடம் விளையாட்டுக்காக ஏமாற்றுகிறார்கள் என நினைத்துள்ளார். எனவே உண்மையாகவே தனது வங்கிக்கணக்கிற்கு பணம் வந்துள்ளதா என்பதை சோதிக்க முடிவு செய்த அவர், வங்கிக் கணக்கில் இருந்து தன் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் அனுப்பி உள்ளார்.
இதன் மூலம் தனது வங்கிக்கணக்கிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திடீரென வந்துள்ளதை உறுதி செய்த அவர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிலிருந்து நண்பருக்கு அனுப்பிய 21 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 21 ஆயிரம் ரூபாய் தவிர்த்து எஞ்சிய மொத்த பணமும், வங்கியால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டது. 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்பத் தருமாறு, வங்கி நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரிய தொகை என்பதால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவெடுத்ததாக ராஜ்குமார் தரப்பில் இருந்து கூறப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அந்த பணத்தை வாகனக் கடனாக மாற்றிக்கொள்வதாகவும், வங்கி தரப்பில் இருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.