சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2ஆயிரத்து 478 மாணவர்கள், 3ஆயிரத்து 164 மாணவியர்கள் என மொத்தம் 5ஆயிரத்து 642 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் ஆயிரத்து 975 மாணவர்கள், 2ஆயிரத்து 907 மாணவியர்கள் என மொத்தம் 4ஆயிரத்து 882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணிதவியல் பாடத்தில் 1, வேதியியல் பாடத்தில் 1, வணிகக் கணிதம் பாடத்தில் 1, பொருளியல் பாடத்தில் 6, வணிகவியல் பாடத்தில் 16, கணக்கு பதிவியல் பாடத்தில் 17, கணினி அறிவியல் பாடத்தில் 4 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 5 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 51 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 3ஆயிரத்து368 மாணவர்கள், 3ஆயிரத்து80 மாணவியர்கள் என மொத்தம் 6ஆயிரத்து448 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 2ஆயிரத்து262 மாணவர்கள், 2ஆயிரத்து628 மாணவியர்கள் என மொத்தம் 4ஆயிரத்து890 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.84 ஆகும். பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
தேர்ச்சி விகிதத்தில் சூளைமேடு சென்னை உயர்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், வண்ணாரப்பேட்டை சென்னை உருது உயர்நிலைப்பள்ளி 97.67 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை உயர்நிலைப்பள்ளி 97.56 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சூளைமேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் ஒரு லட்சத்தை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று நாமக்கல் +2 மாணவர் சாதனை